News details

திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயங்க அனுமதி - தமிழக அரசு கட்டுப்பாடு

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டை போல கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் 10-ந் தேதி முதல் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் தான் இயங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் வரை திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்கி வந்தன. பின்னர் அதற்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பிப்ரவரி மாதம் முதல் 100 சதவீதம் ஆக்கப்பட்டது. திரையரங்கு தற்போது இரண்டே மாதத்தில் மீண்டும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் திரையரங்க உரிமையாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். நாளை தனுஷின் கர்ணன் படம் ரிலீசாக உள்ள நிலையில், அரசின் இந்த அறிவிப்பு படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.